Friday, February 5, 2016

பேரிடர் உதவிப் பணிகள். இரண்டாம் கட்டம். கணக்கு அறிக்கை.



சித்த மருத்துவ முகாம்.
இரண்டாம் கட்டப் பணிகளைத் தொடங்கி சில நாட்களுக்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்களுக்கு இயற்கை மற்றும் சித்த மருத்துவ முகாம்கள் நடத்தினோம். மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு மருத்துவர்களையும், மருந்துப் பொருட்களையும் இயல்வாகை, வானகம், குக்கூ குழந்தைகள் வெளி நண்பர்கள் தங்கள் பொறுப்பில் ஏற்று உதவினர். கூடுதலாக தேவைப்பட்ட மருந்துப் பொருட்களை இங்கு வாங்கிக் கொண்டோம். 2015 டிசம்பரில் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும், கன்னிகாபுரம், முல்லை நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் சித்த மருத்துவ முகாம்கள் நடத்தினோம். குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கான விளையாட்டுக்கள், Origami கலை உள்ளிட்டவற்றை குக்கூ குழந்தைகள் வெளி நண்பர்கள் மேற்கொண்டனர்.



சித்த மருத்துவ முகாம் நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் தொகுப்பு இது. தேதி வாரியாக மேற்கொள்ளப்பட்ட செலவுகளும், அவற்றுக்கான பில்/ரசீதுகள் பின் இணைப்பு 1 ல் இருக்கின்றன.


கடலூர் தார்பாய் லாரி வாடகைச் செலவு
கடலூரில் மேற்கொள்ளப்பட்ட உதவிப் பணிகளின்போது இருந்த பணம் அனைத்திற்கும் அமர் தார்ப்பாய்கள் ஆர்டர் செய்தார். ஆனால், லாரி வாடகை கூடுதலாக வந்ததால், வடசென்னைக் குழுவில் இருந்த பணத்தில் இருந்து ரூ. 15000/- கடலூர் குழுவினருக்கு லாரி வாடகைக்காக கொடுக்கப்பட்டது.

சித்த மருத்துவ முகாமிற்கும், கடலூர் தார்ப்பாய் லாரி வாடகை போக மீதமிருந்த பணம் இது.



பள்ளிகளுக்கான உதவிகள்
கன்னிகாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்திருந்த மின் வயர்களை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்தோம். அதே நேரத்தில் ஆதி திராவிடர் நலத் துறை அலுவலகத்தில் இருந்து அவற்றை புதிதாக மாற்றிக் கொடுத்து விட்டனர். அதனால், இருக்கும் பணம் அனைத்தையும் கொண்டும், மற்ற நண்பர்களின் உதவிகளையும் கொண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்தோம். 6 அடி நீள இருக்கைகளும் மேசைகளும் வாங்கிக் கொடுப்பதென முடிவு செய்து இருக்கும் பணத்திற்கு ஏற்ப முதலில் 45 செட்கள் ஆர்டர் செய்தோம். பிறகு வந்த பணத்தையும் சேர்த்து மொத்தம் 70 செட்கள் வாங்கிக் கொடுத்தோம்.

நாங்கள் வாங்கிக் கொடுத்த desk, bench ஆகியவற்றுக்கான specification இது. 


ஒரு desk ன் எடை 25 கிலோவும், ஒரு bench ன் எடை 17 கிலோவும் உடையது. ஒரு செட்டின் விலை ரூ. 3600/- மொத்தம் 70 செட்கள் வாங்கிக் கொடுத்தோம். அத்துடன் ஸ்டீல் பீரோ ஒன்றும் வாங்கிக்கொடுத்தோம். அது 55 கிலோ எடை உடையது.

04/02/2016 அன்று காலையில் கன்னிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் இந்தப் பொருட்களை ஒப்படைத்தோம்.






நாங்கள் வழங்கிய பொருட்களின் விபரம்.

இதற்கான பில்


இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஆன மொத்த செலவுகளின் தொகுப்பு இது.

நிதி உதவி அளித்தோர்.
இரண்டாம் கட்டப் பணிகளுக்கு நிதி உதவியினை பெறுவதற்கு ட்விட்டர் நண்பர் ப்ரசாத்தின் வங்கிக் கணக்கினை பயன்படுத்தினோம். அதற்கு நிதி அனுப்பியவர்களின் விபரம் இது.


ப்ரசாத்தின் வங்கிக் கணக்கின் முழுமையான அறிக்கை Google Drive ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.

ப்ரசாத்தின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) குறிப்பிட்ட அளவில் இல்லாததால், அதற்குரிய கட்டணமாக ரூ. 537.21 வங்கியால் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்தக் கட்டணத்தை உமர் செலுத்திவிட்டார்.


இரண்டாம் கட்டப் பணிகளுக்கான மொத்த நிதி வரவு

நிதி வரவு செலவு இறுதிக் கணக்கு.


தற்பொழுது இருக்கும் கையிருப்பு முழுவதும் ப்ரசாத்தின் வங்கிக் கணக்கில் இருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு பள்ளிக்கு தேவையான வேறு ஏதேனும் உதவிகள் செய்யலாம் என்று பள்ளியின் தலைமை ஆசிரியரைக் கேட்டோம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 8:30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றோம். மாணவர்களின் வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்திருப்பதால், அவர்கள் வீடுகளில் இருந்து படிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை. அதனால், அவர்களை பள்ளியிலேயே இருக்க வைத்து படிக்க வைக்கின்றோம். அப்பொழுது மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி அல்லது இரவு உணவு வழங்குவதற்கும் உதவிகளைப் பெறுகின்றோம். நீங்கள் அவற்றை செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். அதனால், இருக்கும் நிதிக் கையிருப்பைக் கொண்டு சில நாட்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்க முடிவு செய்துள்ளோம். அதனை செய்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் மேற்கொள்வதற்கு இந்த நிதியினை பயன்படுத்தவிருக்கின்றோம்.

நன்றி.

வடசென்னைக் குழு.

 பின் இணைப்பு – 1 : சித்த மருத்துவ முகாம் – விரிவான செலவுக் கணக்கு மற்றும் ரசீதுகள்.















Saturday, December 26, 2015

பேரிடர் மீட்பு மற்றும் உதவிப்பணிகள் – வடசென்னைக் குழு

1.       சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளம், பல்வேறு நல்ல விடயங்களையும், சில கெட்ட விடயங்களையும் நமக்கு அடையாளம் காட்டிச் சென்றிருக்கின்றது. அரசு இயந்திரம் செயல்படாமல் முடங்கிக் கிடந்தபோது, சமூகத்தின் அங்கமாகிய பொது மக்களே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டது ஒரு சிறந்த குடிமைச் சமூகத்திற்கான (Civil Society) எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக வடசென்னைப் பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட உதவிகளையும், அவற்றிற்கான முழு கணக்கினையும், எங்களது அடுத்த கட்ட உதவிகள் குறித்தும் பகிர்வதற்காகவே இப்பதிவு.  

2.       டிசம்பர் 1, 2015 அன்று சென்னையில் ஏற்பட்ட பெரு மழையைத் தொடர்ந்து, தமிழக அரசின் தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, சென்னை நகரமே வெள்ளக்காடாய் மாறி மக்கள் தத்தளித்தபோது, டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில், சென்னை பெரம்பூர் அருகில், பெரியார் நகர் பகுதியில் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடுகளில் இருந்து சில குடும்பங்களை மீட்டெடுத்து வந்தோம். அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை நோக்கி தன்னார்வலர்களும் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்காக வரத் தொடங்கினர். சென்னையில் இருந்து செயல்பட்ட தன்னார்வலர்களும், வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தங்களது கவனத்தை செலுத்தினர். ஆனால், வடசென்னை பகுதிக்கு உதவிகள் எதுவும் கிடைக்கப்பெறாமலே இருந்தது.



3.       அதனால், சென்னை வரும் தன்னார்வலர்களை வடசென்னை பகுதிகளுக்கு வருமாறு கோரினோம். வடசென்னை பகுதி மீட்பு மற்றும் உதவிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் திரு. வெள்ளையன் அவர்கள் பெரம்பூர் வியாபாரிகள் சங்கக் கட்டிடத்தில் இடம் கொடுத்தார். மன்னார்குடி பெருகவாழ்ந்தான் பகுதியில் இருந்து சமரன் உள்ளிட்ட மாணவத் தோழர்கள், லயோலா மாணவர் செம்பியனை தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களுடன் 4 ம் தேதி காலை பெரம்பூர் வந்து சேர்ந்தனர்.




4.       இதே நேரத்தில் லாயர் ஜிப்ரி, மாணிக் வீரமணி, பைசல், அனீஸ் உள்ளிட்ட முகநூல் நண்பர்கள் ராமேஸ்வரம், தொண்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்களோடு சென்னை வந்து சேர்ந்தனர். மன்னார்குடி மற்றும் மதுரையில் இருந்து வந்த நண்பர்கள் நிலவேம்பு வேர், நிலவேம்புப் பொடி, பிஸ்கட், கொசுவர்த்திச் சுருள்கள், பேஸ்ட், பிரஷ், சானிட்டரி நாப்கின், உடைகள், தண்ணீர், மருந்துப் பொருட்கள், பால் பவுடர், தீப்பெட்டிகள் என்று பல நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும், ட்விட்டர் நண்பர்களும் பங்கெடுக்க, உதவிப்  பொருட்களை தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்க தொடங்கினோம். மேலும் பொருட்களை வாங்குவதற்கு, முகநூல் நண்பர்கள் வீரமணியின் வங்கிக் கணக்கிற்கும், ஜப்பான் முழுமதி அறக்கட்டளை உமரின் வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பினர்.  

5.       எங்களுடைய வேலைகளை நாங்கள் மூன்று வகைகளாக பிரித்துக் கொண்டோம். நோய் எதிர்ப்பு, சுகாதாரம், உணவு & உடை என மூன்று தளங்களில் உதவினோம்.

நிலவேம்புக் குடிநீர் மையம்:
6.       வெள்ள நீர், சாக்கடை நீர் ஆகியவற்றின் வழியாக நோய்கள் பரவக் கூடிய அபாயம் இருப்பதால், பொது மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக நிலவேம்புக் குடிநீரைக் காய்ச்சி சென்னை முழுவதும் வழங்கத் தொடங்கினோம். நாங்கள் நேரடியாக செல்லும் பகுதிகள் மட்டுமின்றி, சென்னையில் இருக்கும் யார் வேண்டுமானாலும் வந்து எங்களிடம் நிலவேம்புக் குடிநீரை பெற்றுச் சென்று அவர்களது பகுதிகளில் கொடுக்கலாம் என்று தெரிவித்தோம். அதன்படி சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தன்னார்வலர்களும், பல்வேறு மருத்துவமனைகளில் இருந்தும் தினந்தோறும் வந்து நிலவேம்புக் குடிநீரை பெற்று பொது மக்களுக்கு வழங்கினர்.



சானிடரி நாப்கின்கள் மையம்
7.       வெள்ளத்தில் சிக்கியிருக்கும் பெண்களுக்கு வழங்குவதற்கு தேவையான நாப்கின்களை, சென்னையில் இருக்கும் தன்னார்வலர்கள் வந்து பெற்றுச் சென்று அவர்கள் பகுதிகளில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தோம். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நாப்கின்களை அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுக்கும் மையமாகவும் செயல்பட்டோம். தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வலர்கள் தினமும் மையத்திற்கு வந்து நாப்கின்களை பெற்றுச் சென்று மக்களுக்கு உதவினர்.

உணவு & உடை உதவிகள்:
8.       வடசென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக வடசென்னைக் குழு தினமும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை எடுத்துச் சென்று வழங்கினோம். சமைத்த உணவை வழங்குவதை விட, Ready to eat வகையில் பிஸ்கட், ப்ரெட் ஆகியவற்றை வழங்குவோம் என்று முடிவெடுத்தோம். அதன்படி, ஒரு குடும்பத்திற்கான தேவைகளை தனி கவரில் போட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கினோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சமாக 4 பிஸ்கட் பாக்கெட்டுகள், பால் பவுடர் 100 கிராம், நாப்கின் 1 பாக்கெட், தண்ணீர் பாக்கெட்டுகள், கொசுவர்த்திச் சுருள், தீப்பெட்டி, பேஸ்ட், பிரஷ், சோப், மெழுகுவர்த்தி 1 பாக்கெட், குழந்தைகளுக்கான டயாபர்   ஆகியவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். சில நேரங்களில் கிடைக்கும் பொருட்களை பொறுத்து, ப்ரெட், ஜாம், பால் பாக்கெட், பழங்கள், அரிசி ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தோம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாய், போர்வை, உடைகள் போன்றவற்றையும் வழங்கினோம். டிசம்பர் 4 ம் தேதி அன்று நாங்கள் சென்ற பகுதிகளில் எல்லாம் கழுத்தளவு நீரில் சென்றுதான் பொருட்களை கொடுத்தோம். அடுத்த நாளில் இருந்து பொருட்களை சுமந்துச் செல்வதற்கு லாரி ட்யுப்களை பயன்படுத்தினோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் சென்ற பகுதிகளும், வழங்கிய பொருட்களின் விபரமும் பின் இணைப்பு – 1 ல் பதிவு செய்து இருக்கின்றோம்.




மத்திய சென்னை, தென் சென்னை உதவிகள்:
9.       நாங்கள் வடசென்னையில் உதவிப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் ஒடுக்கப்படும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எந்த உதவியும் செல்ல வில்லை என்று நண்பர்கள் பலரும் தெரிவித்தனர்.  குடிசைகளை இழந்து, ரோட்டோரத்தில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்ததையும் பார்த்தோம்.  



10.   அதற்கு பின்பு ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு பகுதிகளில் விளிம்பு நிலை மக்கள்  வசிக்கும் இடங்களை தேடிச் சென்று எவ்வித உதவியும் கிடைக்காத மக்களுக்கு போர்வைகள், பாய்கள், உடைகள் உள்ளிட்டவற்றோடு, அடிப்படைப் பொருட்களையும் வழங்கினோம்.

ஸ்டிக்கர் அடிமைகளிடம் தப்பிய விதம்.
11.   கடலூருக்கு செல்லும் நிவாரணப் பொருட்களை அதிமுகவின் அடிமைகள் கைப்பற்றி அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியதை பலரும் கூறினார்கள். நாங்கள் முதல் நாளில் இருந்தே எங்களுடைய வாகனங்களில் எந்த பேனரும் கட்டாமல், எவ்வித அடையாளமும் இன்றியே உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்த்தோம். அதிலும் வடசென்னை பகுதிகளில் அதிமுகவினர் தலை காட்டவே இல்லை. அதனால், வடசென்னையில் சிக்கல்கள் இல்லை. ஆனால், தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் அதிமுகவினர்  வாகனங்களை வழிமறிக்கின்றனர் என்று தகவல்கள் வந்தன. அதனால், நாங்கள் தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளுக்கு இரவில் 10 மணிக்கு மேல் சென்று பொருட்களை கொடுத்தோம். உதவி செய்பவன் பதுங்கிச் சென்று கொடுக்கும் அவலமெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடக்கும்.

துப்புரவுப் பணிகள்:
12.   டிசம்பர் 9 ம் தேதியன்று ஒரு குழுவினர், கோட்டூர்புரம் அரசுப் பள்ளிக்கு சென்று இரண்டு தளங்களை சுத்தம்  செய்யும் பணியிலும் ஈடுபட்டோம்.

தன்னார்வலர்கள்:
13.   முதல் நாள் வந்து இணைந்து கொண்ட மன்னார்குடி, மதுரை நண்பர்களோடு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தன்னார்வலர்கள் வந்து இணைந்து பணியாற்றினர். கன்னியாகுமரி, மேட்டுப்பாளையம், பெங்களுரு, திருவண்ணாமலை என்று பல்வேறு ஊர்களில் இருந்தும், மென்பொருள், மருந்து விற்பனை, ஆசிரியர் என்று பல துறைகளில் இருந்தும், ட்விட்டர், பேஸ்புக் என்று பல்வேறு சமூக வலைதள பயனாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்தனர். அற்புதம் அம்மாள் அவர்களும், பேரறிவாளன்  கல்விப் பாசறையின் தோழர்களும் உதவி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேரடியாக மக்களுக்கு உதவ முடியாவிட்டாலும், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பலரும் உதவினர். யாரிடம் பொருள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, யாருக்கு என்ன உதவி தேவைப்படுகிறது என்பதையும் கண்டறிந்து அவற்றை எங்களுக்கு தெரியப்படுத்தி உதவி செய்த ட்விட்டர் நண்பர்கள் ஏராளம். தன்னார்வலர்கள் தேவை என்று தெரிவித்தபோதும், ட்விட்டர் நண்பர்கள் பல்வேறு தன்னார்வலர்களையும் எங்கள் இடத்திற்கு அனுப்பி உதவிப் பணிகளில் பங்கெடுக்க வைத்தனர். 

14.   காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
ஞாலத்தின் மாணப் பெரிதுஎன்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப பேரிடர் காலத்தில் ஒவ்வொருவரும் தத்தம் தளத்தில் இருந்து செய்த எந்த உதவியாக இருந்தாலும் அது மிகப் பெரும் பங்களிப்பை இந்தச் சமூகத்திற்கு செய்திருக்கின்றது. ஒரு முழுமையான, முன்மாதிரி குடிமைச் சமூகமாக (Civil Society) செயல்பட்ட ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்களே.

பொருள் உதவி புரிந்தோர்:
15.   மன்னார்குடி, மதுரை நண்பர்களை தொடர்ந்து மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை, திருச்சி, பெங்களுரு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் என்று பல பகுதிகளில் இருந்தும் உதவிப் பொருட்கள் 6 லாரிகள் அளவிற்கு வந்து சேர்ந்தன. இது தவிர ட்விட்டர் நண்பர்களும், முகநூல் நண்பர்களும் தேவையான பொருட்களை பெருமளவில் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆவடி படைத் தொழிற்சாலை ஊழியர்கள், திருவிக நகர் பகுதி நண்பர்கள், கற்கை நன்றே குழுவினர் என்று பலரும் தேவைப்படும் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர்.

16.   அதே நேரத்தில், யாரிடம் இருந்து உதவி பெறுவது என்பதிலும் நாங்கள் தெளிவாகவே இருந்தோம். எங்களுடைய பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தபோது, மக்களின் வளங்களை உறிஞ்சும் பெப்சி நிறுவனத்திடம் இருந்து, நாங்கள் தண்ணீர் தருகிறோம்; பெற்றுக் கொள்ளுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்பினார்கள்.



17.   எவ்வித அறநெறியும் இன்றி மக்களின் வளங்களை சூறையாடும் பெப்சி நிறுவனம், பேரிடரை பயன்படுத்தி, தானும் மக்களுக்கு உதவுவதாக நடத்திய நாடகத்திற்கு நாங்கள் துணை போகவில்லை. அப்படி, உண்மையிலேயே அந்த நிறுவனத்திற்கு மக்களின் மீது அக்கறை இருந்தால், தாமிரபரணியில் மக்களின் வளத்தை உறிஞ்சும் ஆலையை கைவிட்டு வெளியேறட்டும். இது போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் எந்த வித உதவியையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்பொழுதுமே மக்களை நேசிக்கும் நண்பர்கள் கொடுத்த உதவிகளை மட்டுமே பெற்றுக் கொண்டோம்.


உதவிப் பொருட்கள் – மதிப்பு :
18.   நாங்கள் 6910 குடும்பங்களுக்கு அடிப்படைப் பொருட்களை, நாங்கள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் மூலம் நேரடியாக வழங்கினோம். இது தவிர பல்வேறு பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் வந்து, சில அடிப்படை உதவிப் பொருட்களை பெற்றுச் சென்று, அவர்களுடைய வாகனங்களில் நமது தன்னார்வலர்கள் சிலரையும் இணைத்துக் கொண்டு, அவர்கள் பகுதிகளில் கொடுத்தனர். நாங்கள் வழங்கிய பொருட்களின் முழு விபரமும் பின் இணைப்பில் தொகுத்திருக்கின்றோம். நாங்கள் வழங்கிய உதவிப் பொருட்களின் மதிப்பு சுமார் 20 லட்சம் அளவிற்கு இருக்கும்.

இரண்டாம் கட்டப் பணிகள்:
19.   முதல் கட்டமாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை கொடுத்த நாங்கள் இரண்டாம் கட்டமாக செய்வதற்கு சில செயல்களை திட்டமிட்டிருந்தோம். அவற்றுள் முதன்மையானதாக அரசுப் பள்ளிகளுக்கு தேவைப்படும் உதவிகளை மேற்கொள்ளலாம் என்று சிந்தித்தோம். அதன்படி, அரசுப் பள்ளிகளுக்கான உதவிகளை நான்கு வகைகளாக பிரித்துக் கொண்டோம்.
Ø  பாதிக்கப்பட்டவற்றை  (வகுப்பறைகள், இருக்கைகள், ஆய்வகங்கள்) சரிசெய்து கொடுப்பது
Ø  அடிப்படை வசதிகள் (கழிவறை) இல்லையெனில் ஏற்படுத்திக் கொடுப்பது.
Ø  பழுதடைந்த கணினிகளை சரி செய்து கொடுப்பது.
Ø  பள்ளியின் தரம் உயர்த்தும் உதவிகள்.

20.   இதற்காக பல்வேறு பள்ளிகளை சென்று பார்த்து வந்த பின்பு, இரண்டு பள்ளிகளில் மேற்குறிப்பிட்ட வேலைகளைத் தொடக்கி விட்டோம். கன்னிகாபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உட்புகுந்த தண்ணீர் பல பாதிப்புகளை உருவாக்கியிருக்கின்றது. பள்ளியின் மின்சார இணைப்புகள் பழுதடைந்திருப்பதால் தண்ணீர் மோட்டார் இயங்காமல், கழிவறைக்கு தண்ணீர் இன்றி பரிதவித்து வருகின்றனர். தற்காலிகமாக பள்ளியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இணைப்புகள் ஆபத்தானவையாக இருக்கின்றன. பள்ளிக்கான மின்சார கேபிள்கள் அனைத்தையும் உடனடியாக மாற்ற வேண்டிய தேவை முதன்மையான தேவையாக இருக்கின்றது. கையில் இருக்கும் பணத்தை வைத்து அதனை சரி செய்ய தொடங்கி விட்டோம்.

21.   கன்னிகாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் தரைத் தளத்தில் தேங்கி நின்ற தண்ணீர் வகுப்பறை பெஞ்சுகள், ஆய்வகங்கள் என்று அனைத்தையும் நிர்மூலமாக்கி விட்டு போயிருக்கின்றது. என்ன மாதிரியான உதவிகள் உங்களுக்கு தேவைப்படும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, அனைத்தையும் இழந்து நிற்கிறோம்; நீங்கள் எந்த உதவிகள் செய்தாலும் அது எங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினார். ஆண்கள் பள்ளியை மீட்டெடுப்பதற்கு உதவ முன்வருமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறோம்.

22.   சென்னை நகரில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் கணினிகள் பழுது நீக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த வேலையினை செய்வதற்கு 60 தன்னார்வலர்கள் முன்வந்திருக்கின்றனர். ஜனவரி முதல் வாரத்தில் அந்த வேலைகளையும் தொடங்குகின்றோம்.

23.   இது தவிர, குக்கூ குழந்தைகள் வெளி குழுவின் நண்பர்கள் உதவியுடன் வட சென்னையின் சில பகுதிகளில் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக origami கலை உள்ளிட்ட ல்வேறு குழந்தைகள் விளையாட்டுக்களை  நடத்தினோம். சித்த மருத்துவ முகாம்களையும் நடத்தியிருக்கின்றோம். இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவுறும்போது அவற்றை விரிவாக பதிகின்றோம்.

வரவு செலவு விபரம்:
(முதல் கட்ட பணிகளுக்கான வரவு மற்றும் செலவு விபரம். 03/12/2015 முதல் 10/12/2015 வரையிலான காலகட்டம்.)

பண வரவு:
24.   வீரமணியின் வங்கிக் கணக்கில் முகநூல் நண்பர்களும், உமரின் வங்கிக் கணக்கில் உமரின் நண்பர்களும் பணம் அனுப்பினர். சிலர் நேரடியாகவும் கொடுத்தனர்.


மேலும், உமரின் வங்கிக் கணக்கு அறிக்கையும் (Bank Statement) Google Drive ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

செலவுக் கணக்கு:
25.   நிதியினை கையாளும் பொறுப்பினை பைசல் மேற்கொண்டார். மேற்கொண்ட ஒவ்வொரு செலவும் உமர், ஜிப்ரி, செம்பியன் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட்டன. ரசீதுகள் பின் இணைப்பு 3 ல்  இருக்கின்றன. உணவு போன்ற ஒரு சில செலவினங்களுக்கு பில்/ரசீது கொடுக்கப்படவில்லை. செலவுகள் குறித்த விளக்கங்கள் பெற விரும்பினால் கீழுள்ள எண்களில் இருக்கும் நண்பர்களை அழைத்து விளக்கம் பெறலாம்.
உமர் 9600781111
செம்பியன் 9600094493
ஜிப்ரி 9677838393
பைசல் 9786363626

26.   நாங்கள் மேற்கொண்ட செலவுகளின் தொகுப்பு இது.




தேதிவாரியான செலவுக் கணக்கு பின் இணைப்பு 2 ல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.


நிதி இருப்பு:
27.   முதல் கட்டப் பணிகள் முடிவுற்றபோது இருந்த வரவு செலவு அறிக்கை இது.




28.   அறிக்கையின் படி இருக்கும் நிதி கையிருப்பு அனைத்தும் தற்பொழுது உமர் வசம் இருக்கின்றது. தற்பொழுது தொடங்கியிருக்கும் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அந்த நிதியினை உமர் பயன்படுத்தி வருகின்றார்.


பேரிடரும், அரசுகளும், மக்களும்:
29.   சமூகத்தின் பல்வேறு தளத்தில் இருந்து பலரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட வெள்ள மீட்பு மற்றும் உதவிப் பணிகள் செயல்படாத அரசையும், செயல்பட்ட குடிமைச் சமூகத்தையும் அடையாளம் காட்டியிருக்கின்றன. இந்த நிகழ்வு குறித்த பார்வையையும் அடுத்து மேற்கொள்ளவேண்டிய சிலவற்றையும் பேச விரும்புகின்றோம். ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பதை நாம் வரலாற்றில் படித்திருக்கின்றோம். சென்னை நகரம் வெள்ளக் காடாய் மாறிப் போனபோது, ஜெயலலிதா செயல்படாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்பதை சமகாலத்தில் பார்க்கின்றோம். ரோம் நகரை நீரோதான் தீ வைத்தான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். ஆனால், சென்னை நகரை மூழ்கடித்த வெள்ளத்திற்கு காரணம் ஜெயலலிதாதான் என்பதை பல தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த வெள்ளத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ராஜீவ் ராய் ஒரு பொது நலவழக்கினை தொடுத்திருக்கின்றார்.  மாநில முதல்வர் மீது நேரடியாக வழக்கு தொடுக்க முடியாது என்ற சட்டச் சிக்கல் இருந்தாலும், அதிகாரிகளை மட்டும் பலி கொடுத்துவிட்டு, ஆட்சியாளர்களை தப்ப விடுவது சரியல்ல. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் கட்சிகள்/அமைப்புகளிடமிருந்தே இழப்பீடு பெற வேண்டும் என்றொரு சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கின்றது. அதன் அடிப்படையில், இந்தப் பேரிடரை ஏற்படுத்திய அதிமுகவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, இழப்பீடு பெறும் வழிமுறைகளை ஆராய வேண்டும்.

30.   சிறப்பாக செயல்பட்ட குடிமைச் சமூகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏனெனில், ஆளும் கட்சி மட்டுமல்ல ஆண்ட கட்சியும் கூட மக்கள் விரோத திட்டங்களையே நடைமுறைப் படுத்தி வந்திருக்கின்றது. ஆனால், ஒரு குடிமைச் சமூகமாக செயல்படாமல், ஒரு தேவதூதன் வந்து தமிழ்நாட்டை காப்பாற்றி விடுவான் என்று சிலர் நம்பத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையைப் பற்றி எங்களுடைய எண்ணத்தில் இருந்ததை தோழர் சுப. உதயகுமார் ஏற்கனவே எழுதியிருப்பதால்,  அவற்றை இங்கே அப்படியே பகிர்கின்றோம்.

ஏழ்மை, வறுமை, உடல்நலமற்ற தாய், பொறுப்பற்ற குடிகாரத் தந்தை, சுத்தமில்லாத வாழ்விடம், ஊட்டச்சத்தில்லா உணவு, கல்வியின்மை, பல்வேறு நோய்கள் என பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோஞ்சான் குழந்தைக்கு ஒரே ஓர் இஞ்ஜெக்ஷன் மட்டும் போட்டு சரி செய்து விடலாம் என்று எண்ணுவது எவ்வளவு தவறோ, அது போலத்தான் ஒரே ஒரு போராளியை, அதிகாரியை, நடிகரை கொண்டு வந்து எட்டு கோடி தமிழருக்கும் ஏற்புடைய சுபிட்சம் தேடும் முயற்சியும்.
[1] பல கோடி மக்களின் ஐம்பதாண்டு காலப் பிரச்சினைகளுக்கு ஒரு நபராய் நின்று ஓரிரு நிமிடத்தில் தீர்வு சொல்வது தவறு.
[2] ஒரு தனி மனிதன் மீதான அபரிமிதப் பாசம், அதீத நம்பிக்கை, அடிமைத்தன சரணாகதி, ஆண்டவனே என்றழைக்கும் பக்திப் பரவசம் தவறாகவே வந்து முடிந்திருக்கிறது. இதற்கு தமிழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மீண்டும் இதே தவறைச் செய்வோம் என்று சொல்வது மடமையிலும் மடமை.
[3] ஒரு போராட்டத்தை, அரசு ஊழியனாய் செய்த ஒரு வேலையை, ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட நபரது குணாதிசயங்கள், விருப்பு வெறுப்புக்கள், நம்பிக்கைகள், சித்தாந்தம், கொள்கை கோட்பாடு என எதைப் பற்றியும் கவலைப்படாது, "எங்களை ஆட்சி செய்" என்று சொல்வது மீண்டும் ஒரு தனிநபர் துதிக்குத்தான் இட்டுச் செல்லும். கருணாநிதிகளும், ஜெயலலிதாக்களும் வேறு பெயர்களில், உருவங்களில் உலா வருவார்கள்.
[4] தேவதூதனாகவே இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தின் முழுப் பொறுப்பையும் ஒரு தனிநபர் கையில் கொடுத்துவிட்டு, அவர் பார்த்துக் கொள்வார், நாம் பழைய மாதிரியே வாளாவிருப்போம், அல்லது அவருக்கு 'ஜே' போடுவோம் என்பது எதேச்சாதிகாரத்துக்கும், தான்தோன்றித்தனத்துக்கும்தான் இட்டுச் செல்லும். பதவி, அதிகாரம், புகழுரைகள், ஆமாம் சாமிகள், (தமிழ்ச் சமுதாயத்தின்) அடிமைத்தனம் போன்றவை ஒரு மனிதனை எப்படி மாற்றும் என்பது கணிக்கமுடியாத ஒரு பெரும் புதிர்.
[5] ஊர்கூடித்தான் தேர் இழுக்க முடியும்; ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் செய்யும் வேலை அல்ல அது. பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்து செய்ய வேண்டிய சமூக-பொருளாதார-அரசியல் புனரமைப்பு வேலையை ஒரே ஒரு நபரால் செய்ய முடியாது. புத்தன், ஏசு, நபி, காந்தி, அம்பேத்கர் போன்ற இறைத் தூதர்களாலும், இமாலய ஆளுமைகளாலும் செய்ய முடியாததை, ஒரு சாதாரண தனி நடிகரால், அதிகாரியால், போராளியால் எப்படிச் செய்ய முடியும்?
[6] கூட்டுத் தலைமை, கூடி முடிவெடுக்கும் தன்மை, சனநாயகம், திறந்தவெளித்தன்மை, பொறுப்புடைமை, முடிவுகள் எடுக்கும் திறன், திட்டங்களை அமுல்படுத்தும் செயல் திறன், பிறரை அரவணைத்துச் செல்லும் அடக்கம், உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் எனப் பல்வேறு அம்சங்கள் கொண்டவை அரசியல், ஆளுமை, ஆட்சி அதிகாரம் எல்லாமே.
[7] இன்றையத் தமிழகத்துக்கு தேவை ஒரு புதிய அரசியல் உபகரணம்:
[] நமது வளங்களைக் காத்துக்கொள்ள,
[] வாழ்வாதாரங்களை தக்கவைக்க,
[] இயற்கையை அழிக்காத, மக்களைக் கொல்லாத, தனியாருக்கு மட்டுமே லாபம் தராத வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்த,
[] பல்வேறு வழிகளில் நம்மை அழித்தொழிக்கும் ஊழலை ஒழிக்க,
[] சாராயத்திலும், சாலைகளிலும், சாகடிக்கும் கொலைக் கும்பல்கள் கையிலும் செத்துக் கொண்டிருக்கும் மனித உயிருக்கு மாண்பு சேர்க்க,
[] நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியை தரமுள்ளதாக்கி கல்விக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த,
[] நம் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள, போதிய வருமானமுள்ள வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த,
[] மக்கள் மாண்புமிக்க மனிதர்களாய் வாழ்ந்து, கடமைகளைச் செய்து, மகிழ்ச்சியான முதுமையை அனுபவித்து, கண்ணியத்துடன் சாக,
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம், சித்தாந்தம், வேலைத் திட்டம், கூட்டு முயற்சி.
இது நூறாயிரம் இளைஞர்கள் சேர்ந்து, பயின்று, ஒருவரையொருவர் பயிற்றுவித்து, கனவுகண்டு, கலந்துரையாடி, களமாடி, சண்டை போட்டு, விட்டுக்கொடுத்து, ஒவ்வொரு குடும்பமாக, ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு ஊராக மாற்றியெடுக்க முனைப்புடனும், முதிர்ச்சியுடனும் செய்ய வேண்டிய மிகக் கடினமான ஆனால் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கடமை, பணி, வேலை, சேவகம், ஊழியம், தொண்டு.
இவற்றையெல்லாம் எப்படிச் செய்வது, இதற்கு நான் என்ன செய்ய முடியும், எப்படிப் பங்களிக்க முடியும் என்று சிந்திப்பதும், செயல்படுவதும்தான் சிறப்பு. சும்மா ராம நாமம்சொல்வது போல, மனதுக்குப் பிடித்த ஒருவர் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பது தன்னையும், தமிழர்களையும் ஏமாற்றும் வீண் வேலை.


31.   ஒரு தேவதூதனை எதிர்பார்க்காமல், ஒரு வலிமையான குடிமைச் சமூகமாக நாம் செயல்படவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது. ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சி, நடத்தை வளர்ச்சி ஆகியவை வலிமையான குடிமைச் சமூகம் அமைந்தால் மட்டுமே நடைபெறும். ஆட்சியாளர்களை வழிநடத்தவும் கூடியதாக குடிமைச் சமூகமே திகழமுடியும். செயல்படாத அரசை நம்பியிராமல், மக்களே ஒரு வேலையினை செய்வது அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கையை வலிமையாக எடுத்துரைக்கும். அதனால், நாம் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை நம்மளவில் முன்னெடுப்போம். பல்வேறு தளங்களில் இது செயல்படவேண்டும் என்றாலும், பேரிடர் தொடர்பான சில வேலைகளை மட்டும் நாங்கள் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.


பேரிடர் மேலாண்மை குறித்த அறிவியல் தகவல்கள்.
32.   சென்னையில் ஏற்படக்கூடிய எவ்வித இயற்கை பாதிப்புகளையும் ஆராய்வதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும், சிறப்பான மேலாண்மைக்கும் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களின் நீர்பிடிப்பு (Catchment), நீர் வெளியேற்றம் (Discharge), உபரி நீர் வெளியேற்றம் (Storm Water Drainage),   புவி அமைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு Digital Elevation Model (DEM) உருவாக்கப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மையில் நிபுணத்துவம் உடைய சில நண்பர்களோடு இது குறித்து பேசி வருகின்றோம். சென்னை நகரில் சில பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் Storm Water Drainage மற்றும் Carrying Capacity ஆகியவற்றை ஏற்கனவே திரட்டியிருக்கின்றோம். மேலும், நீர் மேலாண்மையில் துறை சார் அறிவுடைய ட்விட்டர் நண்பர் பெரியவா மணி @moodanmani அவருடைய சிந்தனைகளை சில ட்விட்லாங்கர்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். அரசை நம்பியிராமல், மக்களாக ஒரு அறிவியல் வழிமுறையைக் கண்டறிவதற்கு, துறை சார் நிபுணர்களை உள்ளடக்கி இந்த வேலைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கின்றோம். பெரியவா மணியும் இணைவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்துதல்:
33.   தமிழர்கள் தமது மரபு வழி அறிவின் அடிப்படையில் நீர் நிலைகளின் கரைகளில் சில குறிப்பிட்ட மரங்களையும், செடி, கொடிகளையும் நட்டு வைத்தனர்.  வெட்டி வேர் போன்று ஆழ வேர் பரப்பும் அனைத்தும் சிறந்த வேர் பிடிப்பான்கள் (Soil Binders). அதன் மூலம் அவை மண் அரிப்பை தடுப்பது மட்டுமின்றி கரைகளை பலப்படுத்தும் வேலைகளையும் செய்து வந்தன. கரைகளை சுத்தப்படுத்துகிறோம் என்னும் பெயரில் soil binders ஐ அழிக்கும் வேலையைத்தான் அரசு செய்திருக்கின்றது. அரசு அழித்த soil binders ஐ பல்வேறு நீர் நிலைகளின் கரைகளில், மண்ணின் தன்மைக்கு ஏற்ப soil binders ஐ தேர்ந்தெடுத்து, நடும் வேலைகளை நாமே செய்யலாம், ஏற்கனவே, சீமைக் கருவேல மரம் அழிப்பதை, செயலற்ற அரசை எதிர்பார்க்காமல் ஆங்காங்கே இருக்கும் தன்னார்வலர்கள் செய்தது போல் soil binders ஐ நடும் வேலையை நாமே முன்னெடுக்கலாம்.

நீர் வழித்தடங்களை, நீர் நிலைகளை தூர் வாருதல்:
34.   நவம்பர் மாதத்தில் பெய்த மழையில் காஞ்சிபுரம் நகரில் தண்ணீர் தேங்கி நின்றது. அதற்கு முன்பு எந்தக் காலத்திலும், காஞ்சிபுரம் நகரில் தண்ணீர் தேங்கி நின்றதில்லை என்று காஞ்சிபுரம் நண்பர் ஒருவர் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் இருக்கும் தன்னார்வலர்கள் பலர் இணைந்து, உடனடியாக நீர் வழித்தடங்களை தூர் வாரும் பணியை செய்திருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் தூர் வாரும் பணியை செய்திருக்கின்றது. அதற்கு பின்பு டிசம்பரில் பெரு மழை பெய்த போதும், காஞ்சிபுரம் நகரில் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தன்னார்வலர்களே முன் வந்து தூர் வாரியது போல், சென்னையிலும் நாமே தூர் வாரும் பணியை முன்னெடுக்க வேண்டும். நம்முடைய வளங்களைக் காக்கவும், அவற்றை வருங்கால தலைமுறைக்கு பாதுகாப்பாக வழங்கவும் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கின்றது.

புவி வெப்பமயமாதலும், நமது கடமையும்;
35.   தற்பொழுது ஏற்பட்ட வெள்ளத்திற்கு அரசின் கையாலாகத்தனம் காரணமாக இருந்தாலும், பெரு மழைக்கு புவி வெப்பமயமாதலே காரணமாக இருக்கின்றது. புவி வெப்பமயமாதல் குறித்து அமர் எழுதியிருக்கும் பதிவு இது

36.   நீர் சூழ்ந்த வீடுகளை சென்னை நகர் முழுவதும் பார்த்தோம். நீர் சூழ்ந்த வேறு சில வீடுகளின் புகைப்படங்களை இங்கு பதிகின்றோம்.
37.   இந்தப் புகைப்படங்கள் சென்னையிலோ அல்லது தமிழ்நாட்டின் வேறு பகுதிகளிலோ எடுக்கப்பட்டவை அல்ல. புகைப்படங்களை நன்றாக பாருங்கள். அதற்கு பின்பு இவை எங்கு எடுக்கப்பட்டவை என்பது குறித்தும், நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்தும் பேசுகின்றோம்.  






38.   மேலே இருக்கும் புகைப்படங்களில் வீடுகளை நீர் சூழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஓரிரு நாட்களில் நீர் வடிந்துவிடும் என்றும் கூட தோன்றலாம். ஆனால், அந்த வீடுகளை சுற்றியிருக்கும் நீர் எந்தக் காலத்திலும் வடியாது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. இந்த வீடுகள் டுவாலு (Tuvalu) என்னும் தீவில் இருக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் இருக்கும் இந்தத் தீவு, புவி வெப்பமயமாதலால் அழியக்கூடிய முதல் தீவாக இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து, தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகள் கடல் நீரில் மூழ்கத் தொடங்கியிருக்கின்றன.

39.   டுவாலு மக்கள் அனைவரும் நியுசிலாந்துக்கு வந்துவிடுங்கள் என்று நியுசிலாந்து அழைப்பு விடுத்தும், டுவாலு மக்கள் தங்கள் வீட்டை விட்டும், தங்கள் தீவை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேற மறுத்து அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். சென்னை நகரில் சில நாட்களுக்கு நம் வீடுகளை நீர் சூழ்ந்ததற்கே எவ்வளவு பரிதவித்தோம். ஆனால், டுவாலு மக்களுக்கு தம்முடைய வீடும், தீவும், நாடும் சில ஆண்டுகளில் கடலில் மூழ்கப் போகிறது என்று தெரிந்து எவ்வளவு பரிதவிப்பார்கள்? அதைத்தான் டுவாலு பிரதமர், டிசம்பர் தொடக்கத்தில் பாரிசில் நடைபெற்ற COP 21 மாநாட்டில் இப்படி தெரிவித்தார். Tuvalu’s future at current warming, is already bleak, any further temperature increase will spell the total demise of Tuvalu”  டுவாலு முழுமையாக அழியக்கூடும் என்னும் ஆபத்தை தெரிவித்து விட்டு, உலக நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். Let’s do it for Tuvalu. For if we save Tuvalu we save the world.

40.   டுவாலுவை மட்டும் அல்ல நம்மையும் காப்பதற்கு நாம் சில உறுதியான வேலைகளை செய்ய வேண்டியிருக்கின்றது.  வளர்ச்சி என்னும் பெயரில் நாம் மேற்கொள்ளும் செயல்கள் உலகை அழிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றன. இந்தப் பூமிப்பந்தை நாம் எந்த வேகத்தில் அழித்து வருகிறோம் என்பதை இந்தப் படத்தைப் பார்த்தால் புரியும்.




பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவம்:
41.   வழுக்கும் சாலைகள், அவற்றில் பறக்கும் கார்கள் என இருப்பதுதான் ஒரு முன்னேறிய நகரத்தின் அடையாளம் என்று நமது பொது புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ஒரு முன்னேறிய நகரம் என்பது எவ்வளவு ஏழைகள் கார்கள் வைத்திருக்கிறார்கள் என்று அறியப்படுவது இல்லை; மாறாக எவ்வளவு செல்வந்தர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதில் இருக்கிறது என்று கூறுகின்றார் என்ரிக் பெனலோசா (Enrique Peñalosa). கொலம்பிய (Colombia) நாட்டின் தலைநகரான போகத (Bogotá) நகரின் மேயராக இருந்தவர் இவர்; 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். அவருடைய உரையை மேற்கோள் காட்ட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அவருடைய சாதனைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். உலகின் மிக மோசமான வன்முறைகளும், ஊழலும் நிறைந்த தலைநகரை, சக மனிதனை நேசிக்கும் மக்களை உடைய அமைதியான முன்மாதிரி நகரமாக அவர் மாற்றினார் என்று அவரை உலகம் கொண்டாடுகின்றது. அதற்கு அவர் கையாண்ட வழிமுறைகளில் முக்கியமான ஒன்றாக பொதுப் போக்குவரத்தில் மேற்கொண்ட மாற்றங்களை குறிப்பிடலாம். கார்களுக்கு எதிரான போரை (War on Cars) தொடங்கி பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி மக்களுடைய உளவியலையே மாற்றினார். அவர் எப்படி இவற்றை செய்தார் என்பதை அவருடைய TED Talk ல் பாருங்கள். 
(இந்தக் காணொளியில் 5:25 நிமிடத்தில் அவர் காறித்துப்பும் மேம்பாலம் இருக்கும் இடம் எது?)

42.   கார்களை பயன்படுத்தாமல், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் பணியினை நாம் செய்கின்றோம் என்பதை உணர்வோம். அதன் மூலம் புவி வெப்பமயமாதலையும் அதிகரிக்காமல் இருக்க துணை செய்கிறோம் என்பதையும் உணர்வோம். இனி, தனி நபராக காரில் பயணம் செய்ய நினைத்தால், ஒரு முறை டுவாலு மக்களின் முகத்தையும், வெள்ளம் மூழ்கடித்த சென்னையின் படத்தையும் நினைவில் நிறுத்தி முடிவெடுப்போம்.   

வீட்டுக்கு ஒரு செடி வளர்ப்போம்:
43.   எப்பொழுதும் மரம் வளர்ப்பு பற்றி பல இடங்களில் பேசக் கேட்டிருப்பீர்கள். ஆனால், நாங்கள் செடி வளர்ப்பு குறித்து பேச விரும்புகின்றோம். ஏனெனில், இன்று கான்க்ரீட் காடாக மாறியிருக்கும் சென்னையில் மரம் வளர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், மொட்டை மாடியிலும் செடிகளை வளர்க்க முடியும். அப்படி நாம் வளர்க்கக் கூடிய செடிகளும், ஆக்சிஜன் தொழிற்சாலையின் ஒரு பகுதியாகி காற்றை சுத்தப்படுத்தும் வேலையை செய்யும். வாகனத்தில் பயணித்து வெளியேற்றும் கார்பன் பாவத்தை, செடி வளர்த்து ஆக்சிஜன் புண்ணியம் மூலம் சரி செய்வோம்.

44.   இதில் இன்னொரு பலனும் இருக்கின்றது. நம் வீட்டில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை எடுத்து செடிகளுக்கு இயற்கை உரமாக இட முடியும். மக்கும் குப்பைகளை செடிகளுக்கு கொடுத்து விட்டால், நம் வீட்டில் இருந்து மக்காத குப்பை மட்டும் வெளியேறும். குப்பைக் கிடங்கிற்கு மக்காத குப்பை மட்டும் வந்தால், அவற்றை கையாள்வதும் எளிதாக இருக்கும். தற்பொழுது குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் வருவதால், குப்பைகளை கொட்டி கொடுங்கையூரில் சில குப்பை மலைகளைத்தான் உருவாக்கியிருக்கின்றோம்.



45.   பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை உரமாக பயன்படுத்தி, செடிகளை வளர்க்கத் தொடங்குவோம். குழந்தைகளின் பிற்காலச் செலவுகளுக்கான பணத்திற்காக கடுமையாக உழைக்கும் நாம், அவர்கள் வாழ்வதற்கு ஏற்ற நகராக இதை பாதுகாக்க ஒரு நாளில் சில நிமிடங்களை ஒதுக்க மாட்டோமா? இந்தப் பூமி நமக்கு மட்டுமல்ல; நம் குழந்தைகளுக்காகவும்தான்.

நன்றி.

வெள்ள மீட்பு மற்றும் உதவிப் பணிகள்,
வடசென்னைக் குழு     


விரிவான கணக்குகள், ரசீதுகள்  ஆகியவற்றை உள்ளடக்கிய பின் இணைப்புகளுடன் கூடிய பதிவினை முழுமையாக தரவிறக்க இங்கே க்ளிக் செய்யவும். 

Edit:
இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து சில கூடுதல் தகவல்கள்.

அரசுப் பள்ளிகளுள் மிக மோசமான பாதிப்புகளை அடைந்த பள்ளி கன்னிகாபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி. அங்கு பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், மாணவர்கள் அமரக்கூடிய இருக்கைகளை மட்டும் நாம் வாங்கிக் கொடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். 

பாதிக்கப்பட்ட சில இருக்கைகள்.



ஏறத்தாழ 70 இருக்கைகள் அந்தப் பள்ளியில் மட்டும் சேதமடைந்திருக்கின்றன. நால்வர் அமரக்கூடிய desk ஒன்றின் விலை ரூ. 6000/- என்னும் அளவிற்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்னும் குறைவான விலைக்கு கிடைக்கக்கூடிய இடங்களையும் தேடி வருகின்றோம். இருக்கைகள் வாங்குவதற்கு நிதி உதவி மேற்கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழுள்ள வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.

Name: Prasath S
Bank: Karur Vysya Bank
Account Number: 1124155000235864
Account Type: Savings
Branch: Cuddalore

IFSC: KVBL0001124

இந்த வங்கிக் கணக்கு ட்விட்டர் நண்பர்  ℳr. கொத்தவரங்கா வினுடையது. பொது வேலைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கு இது. இந்த வங்கிக் கணக்கை பொது வேலைகளுக்காக உமர் பயன்படுத்துகின்றார். வேறு பரிமாற்றங்கள் எதுவும் இதில் நடைபெறுவதில்லை.

நிதி அளிக்கும் நண்பர்கள் ஜனவரி 10, 2016 க்குள் செலுத்துங்கள். அதற்கு பிறகு வெள்ள நிவாரணம் தொடர்பாக இந்த வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் அனுப்ப வேண்டாம். ஜனவரி 10 ம் தேதி வரை எவ்வளவு பணம் கிடைத்திருக்கின்றதோ, அந்தத் தொகைக்கு மொத்தமாக desk வாங்கி இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்கின்றோம். உடனடியாக முழுமையான கணக்கினையும் வெளியிடுவோம்.