Wednesday, September 9, 2015

ஈழம் - பாதைகளும், பயணங்களும் - அறிவரங்கம்.

தமிழீழ ஆதரவாளர்களால் 05/09/2015 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள உமாபதி கலையரங்கில் அறிவரங்கம் நடத்தப்பட்டது. சர்வதேச நாடுகள் தம்முடைய இலாபங்களுக்காக ஈழ விவகாரத்தில் நீதியை மறுத்து, குற்றவாளிகளை காக்கும் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், நாம் மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து இந்த அறிவரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 



தோழர் பாலாஜி, அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


முதலில் பேசிய பேராசிரியர் இராமு மணிவண்ணன் அவர்கள், அமைதி உடன்படிக்கைக் காலத்திலும் கூட கிழக்குப் பகுதியில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதையும், போருக்கான ஆயத்தம் என்பதே இனப்படுகொலைக்கான ஆயத்தம்தான் என்று விரிவாக பேசினார். உள்நாட்டு விசாரணை என்பதை ஏற்கமுடியாது என்று சர்வதேச விசாரணையே தேவை என்றும் தெரிவித்தார்.




அடுத்ததாக பேசிய முனைவர் விஜய் அசோகன் அவர்கள், 2009 இனப்படுகொலைக்கு பிறகு, 2011 வரை சர்வதேச அளவில் தமிழர்கள் மேற்கொண்ட ஜனநாயக நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வ முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டார். இந்த நடவடிக்கைகள் யாவும் நீதியினைக் கோரிய போராட்டத்தின் முக்கிய அங்கம் என்பதையும் பதிவு செய்தார்.  2012 தொடங்கி அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானங்கள், அரசியல் தளத்தில் எப்படி தமிழர்களை முடக்கின என்பதை விரிவாக எடுத்துரைத்தார். ஆட்சி மாற்றம் ஒன்றையே தீர்வு என்று கூறி அமெரிக்கா தமிழர்களுக்குள் நடத்திய சிங்கப்பூர் கூட்டம் உள்ளிட்ட சதி வேலைகளையும் அம்பலப்படுத்தினார். 






அதற்கு பின்பு பேசிய தோழர் உமர், உள்நாட்டு விசாரணை தோல்விகரமானது என்பதை இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையிலும், உள்நாட்டு விசாரணை பொருத்தமற்றது என்பதை ஐ.நா.வின் விதிகளின் அடிப்படையிலும் விவரித்தார். அமெரிக்க தீர்மானங்களை, அமெரிக்காவின் கொள்கைகளில் இருந்து புரிந்து கொள்ள வேண்டுமென்று கூறியதோடு, ஐ. நா. தற்பொழுதும் அமைப்பு ரீதியிலான தோல்வியை தழுவுகின்றது என்று கூறினார். சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றங்களில் இலங்கை, இந்திய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது வழக்கு பதியக் கூடிய ஒரு புதிய வழிமுறையை கூறினார். மேலும், சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிய பின்பு, அதற்காக மாற்று சர்வதேச விசாரணைகளை எப்படி முன்னெடுக்கலாம் என்றும் கூறினார். தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக்கான சர்வதேச நகர்வுகள் குறித்தும் பேசினார்.





அதற்கு பின்பு அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில்களும் வழங்கப்பட்டன. 20 க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 80 பேர் கலந்து கொண்ட இந்த அறிவரங்கில் மாற்று சர்வதேச விசாரணைக்கான முன்னெடுப்புகளில் தாமும் பங்கெடுப்பதாக பலரும் தெரிவித்தனர். 




இறுதியில், தோழர் பொன். ஏழுமலை நன்றி தெரிவித்து அறிவரங்கத்தை நிறைவு செய்தார்.


---***---***---***---

நிகழ்விற்கான வரவு மற்றும் செலவு அறிக்கை.




இது தவிர, சுவரொட்டிகள் அச்சிடுவதையும், அவற்றை ஒட்டுவதையும் தோழர் அமர்நாத், தனது தனிப்பட்ட செலவில் செய்தார். அதற்கான செலவு ரூ. 4500 ஆனது. 

1 comment: